பிராத்தினை மற்றும் நேர்த்திகடன்
அங்கயர்கண்ணியாம்,அபிராமவல்லியாம், ஆனந்தரூபமயிலாம், அண்டாண்டகோடியெல்லாம் ஈன்ற அன்னை அருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் கொவென்றி நகரில் எழிலாக வீற்றுள்ளாள்.
வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் விரும்பியே அளிக்கும் அருள்மாரியாக வழங்குகிறாள். வேதாந்த வள்ளியாம் வேப்பிலைகாரியான கொவென்றி நகர் சிவ முத்துமாரியம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். அம்மனின் தீர்த்தத்தை வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மாணவர்கள் சிறப்பாக படிக்கவும், மன அமைதிக்காகவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செய்வினை கோளாறு, தொழில் விருத்தியடையவும், ஐஸ்வர்யம் பெருகவும் மற்றும் உடல் நல பிரச்சனைகள் தீர இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர். எல்லா வகையான கஷ்ட துண்பங்கள் பிரச்சனைகள், அம்மனின் அருளால் தீர்வு காண்பதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.
நமது அன்னை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் செய்யும் நேர்த்திக்கடன்கள்.
சர்க்கரை மற்றும் உப்பு கரைத்துப் பிரார்த்தித்தால், எல்லா வகையான கஷ்டங்களும் விரைவில் கரைந்து காணாமல் போகும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
அம்மனுக்குப் புடவை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்து, கூழ்காய்ச்சி, பானகம் கொடுத்தும், பாங்கான நல்வாழ்விற்கு பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், கஷ்டங்கள் போக்கிட எலுமிச்சை மாலை சாற்றியும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. வேப்பிலையில் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றுகின்றனர், உருவ வகையறா கண்மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், மாவிளக்கு ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.